Friday, 12 December 2014

லிங்கா திரைப்படம் - விமர்சனம்

லிங்கா விமர்சனம்.

Lingaa tamil movie poster

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினியின் லிங்கா வெளியாகியிருக்கிறது. எந்திரனுக்குப் பிறகு சுமார் நான்கு வருடங்கள் கழித்து இந்தப் படம் வெளிவருவதாலோ என்னவோ ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த சினிமா ரசிகர்கள் மத்தியிலும் லிங்கா படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த எதிர்பார்ப்பை ரஜினியின் லிங்கா எந்த வகையில் நிறைவு செய்திருக்கிறது…

கதை… ஏற்கனவே இணையதளங்களில் பட்டும் படாமலும்… லீக் ஆகிவிட்ட ஒன்றுதான்.

1939… ஆங்கிலேயர் ஆட்சி காலம்… மக்களின் பஞ்சத்தைப் போக்க தன் வீடு வாசல் எல்லாவற்றையும் விற்று அணை ஒன்றை கட்டுகிறார் ராஜா லிங்கேஸ்வரன். இந்த அணையை ஒட்டி ஒரு கோயிலையும் கட்டி முடிக்கிறார். இந்த கோயில் பல வருடங்களாக பூட்டியே கிடக்கிறது. அணையை ஆய்வு செய்ய வந்த பொதுப்பணித்துறை அதிகாரி கொல்லப்படுகிறார்…

அவர் சாகும் தருவாயில் பூட்டிக் கிடக்கும் கோயிலை உடனே திறந்துவிடுங்கள்… என்கிறார். ஊரார் எல்லாரும் சேர்ந்து கோயிலை திறக்க முடிவு செய்கிறார்கள். கோயிலை திறக்க வேண்டும் என்றால் ராஜா லிங்கேஸ்வரனின் வாரிசு பேரன் லிங்காவை அழைத்து வந்து அணையை திறக்க வைக்க வேண்டும் என்கிறார் ஊர் பெரியவர். ஆனால் லிங்கா இருக்கும் இடம் யாருக்கும் தெரியாததால், லிங்காவைத் தேடுகிறார்கள்.

தேடிக் கண்டுபிடித்துப் பார்த்தால் லிங்கா ஒரு திருடன். அவனை அழைத்து வந்து அணைக் கோவிலை திறந்தார்களா…? பொதுப்பணித்துறை அதிகாரி கொலைக்கு என்ன காரணம்… அணையை தரைமட்டமாக்க துடிக்கிறார் அந்த பகுதி எம்பி… அவர் திட்டத்தை லிங்காவால் முறியடிக்க முடிந்தா? என்பது மீதி கதை. இதற்குள் ராஜா லிங்கேஸ்வரன் அணை கட்டிய கதையையும் கொஞ்சம் நீட்டி முழக்கி சொல்லியிருக்கிறார்கள்.

என்ட்ரி கொடுத்த முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரைக்கும் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டுவிடுகிறார் ரஜினி. கையை ஆட்டி பேசும் ஸ்டைலுக்கு பதிலாக இந்தப் படத்தில் தனது தலை முடியை சுழற்றுவது போன்ற ஸ்டைலை பயன்படுத்தியிருக்கிறார்கள். லிங்கா ரஜினியை விட ராஜா லிங்கேஸ்வரன்தான் திரையில் அதிகநேரம் வருகிறார்.

நம்மை ரொம்பவே இம்பரஸ் செய்வதும் ராஜா லிங்கேஸ்வரன்தான். ரஜினி படங்களில் வரும் ஓப்பனிங் பாடலுக்கு நேர் எதிர் மாறானதாக இருக்கிறது லிங்கா படத்தில் ரஜினியின் ஓப்பனிங் பாடல். அதுவும் அந்த பாடலுக்கு ரஜினி வெளிநாட்டில் ஆடிப் பாடும் பாடல் காட்சிகளைப் பார்க்கும் போது, பார்த்துக் கொண்டிருப்பது கேஎஸ் ரவிக்குமார் படமா? இல்லை ஷங்கர் படமா என்கிற சந்தேகத்தை கொடுக்கும் விதமாக பிரமாண்டமாக இருக்கிறது.

லிங்கா வைர நெக்லசை திருடும் காட்சிகளில் பூட்டப்பட்ட பூரோவின் சாவியை எடுப்பது தொடங்கி அந்த காட்சி ரொம்பவே நீளமானது என்றாலும் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பில் சீட் நுனிக்கு வரவைத்துவிடுகின்றது. சின்ன பீரோக்குள் ரஜினியும் அனுஷ்காவும் விளையாடும் திருவிளையாடல்களை வைத்தே அவ்வளவு காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள்… அடேங்கப்பா…!

ராஜா லிங்கேஸ்வரனுக்கு உதவியாளராக வந்து பின்பு அவருக்கு மனைவியாகவும் ஆகிவிடுகிறார் பாரதி கேரக்டரில் வரும் சோனாக்க்ஷி. படத்தில் இவர் அதிகம் பேசும் வசனம் ‘நிறுத்துங்க…’ என்பதாகத்தான் இருக்கும். ரவிக்கை அணியாத பெண்ணாக படம் முழுக்க வலம் வருகிறார் சோனாக்க்ஷி.

லிங்கா ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அனுஷ்கா. டிவி சேனல் ஒன்றின் ரிப்போர்ட்டராக அறிமுகமாகும் அனுஷ்கா, கோயிலை திறக்க லிங்காவை தனது சொந்த ஊருக்கு அழைத்து வரும் வேலையை செவ்வனே செய்கிறார். காவல் நிலையத்தில் அப்பாவி பெண்ணாக என்ட்ரி கொடுத்து கடைசியில் அதகளப்படுத்துகிறார் அனுஷ்கா.

லிங்கா ரஜினிக்கு நண்பர்களாக நடித்திருக்கிறார்கள் சந்தானம், கருணாகரன், பாலாஜி… இவர்களில் சந்தானம் வாய் திறக்கும் போதெல்லாம் திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது.

வசனங்களில் ராஜா லிங்கேஸ்வரன் பேசும் ‘எந்த வேலையாக இருந்தாலும் இஷ்டப்பட்டு செய்யணும்…’ தொடங்கி பல வசனங்கள் கருத்தாழம் மிக்கவையாக இருக்கின்றன. ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் பிரமாண்டம் இன்னும் பிரமாண்டமாகியிருக்கிறது. ரஹ்மானின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் காட்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கின்றன. படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அத்தனை பேரையும் வேலையில் சுழுக்கெடுத்த காட்சிகள் ராஜா லிங்கஸ்வரன் சம்பந்தப்பட்ட காட்சிகளாகத்தான் இருக்கும்.

இந்த காலகட்டத்தில் நடக்கும் கதையில் ப்ராப்பர்ட்டிக்காக ரொம்பவே மெனக்கெட்டிருப்பார்கள் போலிருக்கிறது. சாப்பிடும் பாத்திரங்கள் அனைத்தும் வெண்கலத்தில் இருக்கின்றன. ப்ராப்பர்ட்டிகளை தேடிப்பிடித்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அரண்மனை வேலைப்பாடுகள், அணை, பாடல்களில் காட்டப்படும் செட்கள் அனைத்துமே பிரமாண்டத்தின் உச்சம் தொடுகின்றன. ராஜா லிங்கேஸ்வரன் என்ட்ரி ரயில் சண்டைக் காட்சியில் அசத்தியிருக்கிறார் சண்டை இயக்குநர்.

படம் துவங்கியதில் இருந்து பரபரவென நகரும் திரைக்கதை ஸ்பீட் பிரேக்கரை பார்த்துவிட்ட வண்டி மாதிரி வேகத்தை குறைத்து மறுபடியும் வேகம் எடுக்கிறது. இதனால் படம் கொஞ்சம் நீளமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

ஜகபதிபாபு எம்பி கேரக்டரில் வில்ல முகம் காட்டுகிறார். இவரது கேரக்டர் கமிஷனுக்காக எதையும் செய்யும் அரசியல்வாதிகளை முன்னிறுத்துகிறது.

எண்ணி சில ஷாட்களில் வந்தாலும் கூட பிரம்மானந்தம் கலகலக்க வைத்துவிடுகிறார். ராதாரவி, நிழல்கள் ரவி, விஜயகுமார், ஆர் சுந்தர் ராஜன், மனேபாலா, இளவரசு, பொன்வண்ணன் என ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் லிங்காவில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர பிரிட்டிஷ் மாவட்ட ஆட்சியராக வரும் வில்லனும் அவர் மனைவியும் கூட நடப்பில் கலக்குகிறார்கள்.

படத்தை இயக்கி க்ளைமேக்ஸில் ஒரு காட்சியில் தலைகாட்டவும் செய்கிறார் கேஎஸ் ரவிக்குமார். ரஜினியுடன் கேஎஸ் ரவிக்குமார் இணைந்த எல்லா படங்களுமே வெற்றிப் படங்கள்தான். அந்த வரிசையில் லிங்காவும் நிச்சயம் இடம் பிடிக்கும்.

No comments:

Post a Comment