Friday 12 December 2014

ரஜினிகாந்தின் "லிங்கா திரை விமர்சனம்" !

lingaa-movie-review-poster


Lingaa Rajini movie review


எந்திரனுக்கு பிறகு நான்காண்டுகள் காத்திருப்பு. கோச்சடையானை பொம்மை பட லிஸ்ட்டில் சேர்த்துவிட்டதால் அசல் ரஜினி எப்போது திரையில் தரிசனம் தருவார் என காத்திருந்த அவரது ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்ய வந்திருக்கிறது லிங்கா.

ஆறே மாதம். ஆபரேஷன் சக்சஸ் ஆகணும் என லிங்கா ப்ராஜெக்டை ரஜினி நம்பி தந்தது கே.எஸ். ரவிகுமாரிடம். இதோ ரஜினியின் பிறந்த நாள் பரிசாக படத்தை முடித்து சொன்னதை செய்திருக்கிறார் இயக்குனர்.

 கதை: நண்பர்களுடன் சேர்ந்து திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறான் லிங்கா. சோலையூர் மக்களுக்காக அணைகட்டி பெரும் உதவிகளை செய்த பாட்டனார் ராஜ லிங்கேஸ்வரர் பற்றி எடுத்துக்கூறி அங்கிருக்கும் கோவிலை திறந்து வைக்க லிங்காவை அழைத்து வருகிறார்கள்.

தனக்கென்று எந்த உதவியும் செய்யாத பாட்டனார் மீது கோபமாய் இருக்கும் லிங்கா அவரது வரலாற்றை கேட்கிறான். 1939 ஆம் வருடம். பிரிட்டிஷ் அரசிடம் அடிமைப்பட்டிருந்த காலமது.

சோலையூர் மக்களின் தண்ணீர் வறட்சியை போக்க ராஜா லிங்கேஸ்வரர் மதுரை கலெக்டர் பதவியை ஏற்கிறார். ஆனால் அணை வராமல் தடுக்க ஒரு பிரிட்டிஷ் அதிகாரி முட்டுக்கட்டை போடுகிறார்.

அணையை கட்ட அவர் சந்திக்கும் போராட்டங்கள் என்ன? பேரன் லிங்கா தனது பங்காக ஊர் மக்களுக்கு செய்யும் உதவிகள் என்ன? ‘ஓ நண்பா’வில் சூப்பர் மாஸ் ஹீரோவுக்கான இமேஜை ரஹ்மான் பெரிதாய் உயர்த்தாவிட்டாலும் அதிரடி ஸ்டைலில் அறிமுகமாகி பட்டையை கிளப்புகிறார் ரஜினி. என்ன ஒரு எலெக்ட்ரிக் எனர்ஜி.

க்ளோஸ் அப் காட்சிகளில் முதுமை அதிகமாய் எட்டிப்பார்க்கிறது. மற்றபடி கேமரா சற்று தள்ளி இருக்கும்போது சூப்பர் ஸ்டார் பளிச். பேரனை விட பிரிட்டிஷ் கால லிங்காதான் கம்பீரம். ‘இஷ்டப்பட்டது வேணும்னா கஷ்டப்பட்டுதான் ஆகணும்’, ‘ஒருவேளை சாப்புடலனா பரவாயில்ல. ஒருவேளை  கூட சாப்புடலனா?’ என கதையுடன் பயணிக்கும் பஞ்ச்கள் ரசிக்க வைக்கின்றன. ‘எவ்ளோ உயரத்துல படுத்தாலும் தூங்குற உயரம் நம்ம உயரம்தான’ வசனம் டாப்.

கொஞ்சமே கொஞ்சம் கிளாமர். கண்கவர் அழகு என அனுஷ்கா க்யூட். ‘வறண்ட பூமியில் இப்படி ஒரு செழிப்பான தக்காளியா?’ என கேட்கத்தோன்றினாலும் அம்சமான தோற்றம், நகைச்சுவை என தமிழில் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு சோனாக்ஷி நன்றாய் ஸ்கோர் செய்துள்ளார்.

சந்தானத்தின் காமடி சுமார். கருணாகரன் ஐயோ பாவம். ரஜினி – ரவிகுமார் இணையும் படங்களில் எப்போதும் இருப்பது போல ஏகப்பட்ட துணை நடிகர்கள். எட்டப்பன் டைப் கேரக்டரில் சுந்தரராஜன் மட்டும் பெயர் வாங்குகிறார்.

ரஜினிக்கு தொல்லை தரும் பிரிட்டிஷ் வில்லன் கேரக்டரில் நடித்தவர் நல்ல பெர்பாமன்சை தந்திருந்தாலும் வில்லத்தனம் குறைவு. ஆந்திராவின் முன்னணி நடிகர் ஜகபதி பாபுவாவது லிங்காவுக்கு சிம்ம சொப்பனமாய் இருப்பாரென்று பார்த்தால் காற்றுப்போன பலூனாய் போய் விடுவது பரிதாபம்.

ரஜினி படமென்றால் வில்லன் இருந்தால்தானே ஆட்டம் அதிரடியாய் இருக்கும். செந்தாமரை, ரகுவரன், ரம்யா கிருஷ்ணன் இடத்தை நிரப்ப இனி யார் வருவாரோ?

ரஹ்மானின் இசையில் இந்தியனே வா, உண்மை ஒருநாள் மற்றும் சின்ன சின்ன நட்சத்திரங்கள் பாடல்கள் நிறைவு. மோனா பாடல் சுமார். பின்னணி இசை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ரத்னவேலின் கேமரா உழைப்பு அபாரம். கலை இயக்கம் மற்றும் உடை அலங்காரம் இரண்டும் மெச்சும்படி உள்ளன.

ரயிலுக்கு மேலே ரஜினி கர்ணம் அடித்து பறக்கும்போதும், ராட்சத பலூனில் குதித்து சாகசம் செய்யும்போதும் சர்க்கஸ் பார்த்த உணர்வுதான் வருகிறது.  தீப்பொறி பறக்க வேண்டிய சண்டைக்காட்சிகளை கம்யூட்டர் க்ராபிக்ஸ்/ விசுவல் எபெக்ட்ஸ் மூலம் எடுத்து கோச்சடையானை நினைவுபடுத்தி இருக்கும் ஸ்டன்ட் மாஸ்டர்கள் ரமேஷ் மற்றும் லீ விட்டேகர் இருவரையும் ஓங்கி ஒரு பஞ்ச் வைத்தால் தப்பே இல்லை. சோதா வில்லன்களை போல க்ளைமாக்ஸ் பலூன் சண்டையும் ‘அவ்வளவுதானா’ என கேட்க வைக்கிறது.

முதல் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் வைர கடத்தல், தமாசு என ஒரு வழியாக கடந்த பிறகுதான் கதையே ஆரம்பம். இடைவேளைக்கு பிறகு கிளைக்கதைகள், அதிகப்படி மசாலா என அலைபாயாமல் அணையை மையமாக வைத்தே (திரைக்)கதை அமைத்திருப்பது ப்ளஸ்.

பெரும்பாலான இரண்டாம் பாதியை ஆக்ரமிப்பது பிரிட்டிஷ் கால கதைதான். ‘முத்து’ சாயல் லிங்காவில் ஆங்காங்கே உண்டு. அணை கட்டுவதால் ஏற்படும் பிரச்னைகளை ஆழமாக சொல்லாவிட்டாலும் அதற்கு போதுமான முக்கியத்துவம் தந்திருக்கிறார் ரவிகுமார்.

கண்ணை மூடிக்கொண்டு கமர்சியல் மசாலாவை எடுத்து ரசிகர்களை ஏமாற்றாமல் சமூகப்பார்வை கொண்ட பீரியட் கதையை தேர்வு செய்து ரஜினிகாந்த் நடித்திருப்பது பாராட்டுக்குரியது. அனல் பறக்கும் வசனங்கள், பின்னி பெடலெடுக்கும் சண்டைகள், நிமிடத்திற்கு ஒரு ஸ்டைல் கொண்ட படமாக லிங்கா இருக்கும்,

சரவெடி பட்டாசு கொளுத்தி மகிழலாம் என ரஜினி ரசிகர்கள் நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும். அந்த வகையில் ரசிகர்களுக்கு இது மற்றுமொரு சுமாரான ‘தலைவர்’ படம்தான். ஆனால் ஒரு நல்ல கதைக்காக இறங்கி வந்து சூப்பர் ஸ்டார் நடித்து இருக்கிறார். அந்த பெருமை போதாதா? என மகிழ எண்ணினால் லிங்கா உங்களை அன்புடன் வரவேற்பார்.

No comments:

Post a Comment